வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த காலப்பகுதியில் உணரக்கூடிய வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறையக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். இந்த குளிர் நிலைமை முதியோர், குழந்தைகள், நோயாளர்கள் மற்றும் குளிர் உணர்திறன் அதிகமுள்ளவர்களுக்கு அசௌகரியங்களையும் சிலருக்கு உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பகல் நேரங்களில் தரை மேற்பரப்புகள் சூரிய ஒளியை உறிஞ்சி, சூரியன் மறைந்த பின்னர் வளிமண்டலத்திற்கு நெட்டலைக்கதிர்வீச்சாக வெளியிடப்படுவதால் இரவு நேர வெப்பநிலை குறைவடைவதாகவும், அந்த நெட்டலைக்கதிர்வீச்சின் அளவையே இரவு குளிரின் அளவு தீர்மானிப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், முகில்களற்ற வானிலை, வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் நிலவும் குளிரான சூழல், உயர் அழுத்தம், பலவீனமான காற்று மற்றும் குறைந்த சாரீரப்பதன் அளவு போன்ற காரணிகள் இந்த கடும் குளிர் நிலைமையை உருவாக்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை அதிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் திறந்த வாகனங்களில் பயணம் செய்வோர், இரவு வேளையில் நெல் வயல் காவலுக்காக வெளிகளில் தங்குபவர்கள், காட்டுப் பகுதிகள் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் பட்டி மாடுகளை பராமரிப்போர், குளங்கள், ஆறுகள் மற்றும் நீரேரிகளுக்கு அருகில் வசிப்போர், குளிர் உணர்திறன் அதிகமுள்ளவர்கள் மற்றும் குளிர் காரணமாக சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக்கூடியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் எனவும், 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சில பகுதிகளில் சற்று கனமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
