Monday, March 2

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02.02.2026) திங்கட்கிழமை காலை முதல் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளூராட்சி மற்றும் தேசிய மட்ட அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நில உரிமை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இனப்பாதுகாப்புக்கு இந்த கிவுல் ஓயா திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த திட்டத்தின் மூலம் சிங்கள குடியேற்றம் முன்னெடுக்கப்படுவதாகவும், அதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
“எமது நிலம் எமக்கு வேண்டும்”,
“வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்”,
“வேண்டாம் வேண்டாம் கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்”,
“வடக்கு கிழக்கை பிரித்தது JVP”

எனும் கோஷங்களை முழக்கமிட்டவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் நெடுங்கேணி பிரதான வீதியை நோக்கி பேரணியாக பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மக்களுடன் கலந்தாலோசனை இன்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்க முடியாது என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version