Monday, January 26

வாகன போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு குற்றத்திற்கான புள்ளிகள் வழங்கும் முறைமை, எதிர்வரும் ஜூலை மாத இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் Govpay மூலம் அபராதத் தொகைகளை செலுத்தும் முறைமை அமலுக்கு வரும் நிலையில், அதனுடன் இணையாக இந்த குற்றப்புள்ளி திட்டமும் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.

கேகாலையில் நடைபெற்ற, பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய புதிய பரிசோதனை கருவி ஒன்றை பொலிஸ் மா அதிபர் இன்று முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் தேவையற்ற உபகரணங்களை அகற்றாமல் இயக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version