Monday, January 26

இணைந்த வடக்கு–கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத வகையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்று (07) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வடக்கு–கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது ஆண்டு நினைவாகவும், 100 நாள் செயல்முறையின் ஒரு பகுதியாகவும் நடைபெறும் இந்தப் போராட்டம், 7வது நாளாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவின் அந்தோனியார்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

“சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வு” எனக் கோஷமிட்டு, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை, வடக்கு–கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் 100 நாட்கள் சுழற்சி முறையில் நடைபெற உள்ளது.

போராட்டத்தின் இறுதியில், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாசித்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • 1948இல் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கடந்த 75 ஆண்டுகளாக இலங்கையில் இன அடிப்படையிலான அரசியல் மேலோங்கி, சிங்கள பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களால் நாடு ஆளப்பட்டுள்ளது.
  • வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோருக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை; மாறாக மொழி மற்றும் மத அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன.
  • புதிய தலைமையுடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, “ஜனநாயகம்”, “நட்டமைப்பு மாற்றம்”, “இன–மத பேதமின்மை” போன்ற கொள்கைகளை முன்வைத்தாலும், அரசியல் தீர்வு குறித்து மௌனம் காத்து வருகிறது.
  • வடக்கு–கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் தளங்களில் ஆக்கிரமிப்பு, மாகாவலி குடியேற்றம், சிங்கள–பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இளையோருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.
  • 2015இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் இலங்கை கையொப்பமிட்டது; அதன் 20வது ஏற்பாடு, அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

மகஜரில், சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல, மாறாக உயர்ந்த ஜனநாயக ஆட்சிமுறையின் வெளிப்பாடு என்றும், போர் முடிந்தபின் நேபாளம் உட்பட பல நாடுகள் இதையே ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எழுபது வருடங்களாக நீடித்த இன அடக்குமுறை மற்றும் முப்பது வருட இன அழிப்பு யுத்தத்தை எதிர்கொண்ட வடக்கு–கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு, இணைந்த வடக்கு–கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே என்றும், அதுவே அவர்களின் உறுதியான அரசியல் அபிலாசை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version