Saturday, May 16

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் மே 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் காணி மீட்பு தொடர்பான கள விஜயத்தை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்புகள் தொடர்பான விடயங்களும், அவற்றை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்களும் வடமாகாண மக்களுடன் பகிரப்பட்டன.

தொடர்ந்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிலவி வரும் காணி அபகரிப்பு நிலைமைகள் தொடர்பாக கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதன் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் காணி பிரச்சினைகளுக்கு இணைந்த முறையில் செயல்பட வேண்டிய அவசியத்தை மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், காணி மீட்பிற்காக வடக்கு–கிழக்கு இணைந்த புதிய வலையமைப்பொன்றும் உருவாக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக,
தொல்லியல் திணைக்களம்
மகாவலி திணைக்களம்
வனஜீவராசிகள் திணைக்களம்
வனவளத் திணைக்களம்
கிபுலோயா திட்டம்
சில பௌத்த துறவிகள் மற்றும் புத்தசாசன அமைச்சு
இராணுவ ஆக்கிரமிப்புகள்
போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஊடாக பொதுமக்களின் காணிகள், மேய்ச்சல் தரைகள், ஆலய நிலங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் தொழில்வாய்ப்புகளும் பாதிக்கப்படுவதுடன், இன விகிதாசார மாற்றங்களையும் ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் வடக்கு–கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக சிறுபான்மையினராக மாற்றும் திட்டமிட்ட செயற்பாடாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.

எனவே, எதிர்காலத்தில் இத்தகைய காணி அபகரிப்புகளைத் தடுக்க வடக்கு–கிழக்கு இணைந்த சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக காணி மீட்பு வலையமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தகவல்:
வடக்கு–கிழக்கு காணி மீட்புக்கான வலையமைப்பு
14.05.2026

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version