Monday, March 2

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையிலும் கருணை காட்ட வேண்டும் எனக் கோரி, ஜனாதிபதிக்கு உருக்கமான மடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

“தமிழ் அரசியல் கைதிகளும் சுதந்திரக்காற்றை அனுபவிப்பார்களா?” – ஜனாதிபதிக்கு உருக்கமான மடல் நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் 49 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருணை காட்ட வேண்டும் எனக் கோரி, ஜனாதிபதிக்கு உருக்கமான மடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த மடலில், நீண்டகாலமாக தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதி ஆனந்த சுதாகரன், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு, சில வருடங்களுக்கு முன்னர் மனைவியையும் இழந்துள்ள நிலையில், அவரின் பிள்ளைகளை பராமரித்து வந்த வயது முதிர்ந்த பாட்டியும் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த பிள்ளைகள் எவ்வித பாதுகாப்புமின்றி வாழ வேண்டிய துயரான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக பல்வேறு வழிகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை பயனளிக்கவில்லை என்றும் அந்த மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டி, ஆனந்த சுதாகரனையும், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் இந்த சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக சிறைக்கம்பிகளுக்குள் தங்களின் இளமைக்காலத்தை இழந்து வரும் இளைஞர்களும் சாதாரண மனிதர்களே என்றும், அவர்களுக்கும் கனவுகளும், ஆசைகளும், சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டிய உரிமையும் உண்டு என்றும் அந்த மடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“சுதந்திரக்காற்று அனைவருக்கும் சொந்தமானது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அது கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ள அந்த மடலில், ஜனாதிபதியாக தாங்கள் பதவியில் உள்ள காலத்திலேயே, தமிழ் அரசியல் கைதிகளும் அந்த சுதந்திரக்காற்றை சுவாசிக்க வழி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உருக்கமான மடலை ஈழத்து எழுத்தாளர் தன. ரஜீவன் (Dr. Thana Rajeevan) எழுதியுள்ளார். அவர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை இந்த சுதந்திர தினத்தில் உறுதிப்படுத்தினால், தமிழ் மக்கள் எப்போதும் அதை நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version